சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.45 திருஆமாத்தூர்
பண் - கொல்லிக் கௌவாணம்
காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே.
1
பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே.
2
காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.
3
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே.
4
வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருய் ஆமாத்தூர் ஐயனே.
5
காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்து தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே.
6
எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே.
7
பொன்னவன பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே.
8
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே.
9
உற்றனன் உற்றனன் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே.
10
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை
மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com